மீன்சுருட்டி:
குளிக்க சென்றார்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள மேலணிக்குழி மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மகன் முருகன்(வயது 29). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் அந்தப் பகுதியில் உள்ள வடக்குவெளி ஈஸ்வரன் குளத்தில் குளிப்பதற்காக முருகன் இறங்கியுள்ளார். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது.அப்போது அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முருகன் என்பவர் அதைக்கண்டு சத்தம்போட்டதால் அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். மேலும் இது குறித்து மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிக்கு தகவல் கொடுத்தனர்.
சாவு
இது குறித்த தகவலின்பேரில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இருந்து தீயணைப்பு படையினர் மற்றும் மீன்சுருட்டி போலீசார் அங்கு வந்து தண்ணீரில் இறங்கி தேடினர். நீண்ட நேரம் தேடியும் முருகன் கிடைக்கவில்லை.
ஈஸ்வரன் குளம் அதிக ஆழமாக இருந்ததால் மாலை வரை தேடும் பணி தொடர்ந்தது. இதையடுத்து மாலை 6 மணி அளவில் முருகனின் உடலை தீயணைப்பு படையினர் மற்றும் மீன்சுருட்டி போலீசார் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.