தேவத்கல் நீர்ப்பாசன திட்டம் ரூ.134 கோடியில் நிறைவேற்றப்படும்; பசவராஜ் பொம்மை பேச்சு
கல்யாண-கர்நாடக வளர்ச்சிக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேவத்கல் நீர்ப்பாசன திட்டம் ரூ.134 கோடியில் நிறைவேற்றப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு:
டிராக்டரில் சென்ற முதல்-மந்திரி
யாதகிரி மாவட்டத்திற்கு நேற்று ஒரு நாள் சுற்றுப்பயணமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சென்றிருந்தார். சுராப்புராவில் ரூ.1,060 கோடிக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நேற்று காலையில் அவர் யாதகிரிக்கு சென்றிருந்தார். அங்கு வைத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை ராஜுகவுடா எம்.எல்.ஏ. வரவேற்றார். பின்னர் பசவராஜ் பொம்மை, மந்திரிகள் அசோக், கோவிந்த் கார்ஜோள் உள்ளிட்டோரை டிராக்டர் ஓட்டியபடி ராஜுகவுடா அழைத்து சென்றார்.
மந்திரி அசோக், தேவத்கல் கிராமத்தில் தங்குகிறார். அந்த கிராமத்தில் நிலவும் பிரச்சினைக்கு அவர் தீர்வு காண உள்ளார். முன்னதாக சுராப்புரா அருகே தேவத்கல் பகுதியில் நீர்ப்பாசன திட்டத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்து பேசியதாவது:-
ரூ.134 கோடியில் நீர்ப்பாசன திட்டம்
யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா தேவத்கல்லில் ரூ.134 கோடிக்கு நீர்ப்பாசன திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாராயணபுரா, பூனாலா உள்ளிட்ட சில நீர்ப்பாசன திட்டங்களால் 44 ஏக்கர் விவசாய பகுதிக்கு நீர்ப்பாசனம் கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம் ராஜுகவுடா எம்.எல்.ஏ. ஆவார். யாதகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. யாதகிரி மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் உணவு பூங்கா, மருத்துவ பூங்கா தொடங்கப்பட இருக்கிறது. யாதகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை பா.ஜனதா அரசு எடுத்து வருகிறது. தேவத்கல் கிராமத்தில் மந்திரி அசோக் தங்குகிறார். இதன்மூலம் தேவத்கல் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மந்திரி அசோக் நடவடிக்கை எடுப்பார்.
கல்யாண-கர்நாடக வளர்ச்சிக்கு...
ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள வருவாய்த்துறை ஆவணங்கள் விவசாயிகளின் வீடுகளுக்கே கொண்டு வந்து கொடுக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மக்கள் படும் துயரங்கள், பிரச்சினைகளை அறிந்து கொள்ளவும், அதற்கு தீர்வு காணும் நோக்கத்துடன் தான் கிராமத்தில் தங்கும் நிகழ்ச்சியும், கிராமங்களை நோக்கி மாவட்ட கலெக்டர்களின் நடை என்ற திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. யாதகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடிக்கான திட்டங்களுக்கு இன்று (நேற்று) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
கல்யாண-கர்நாடக வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் ரூ.3 ஆயிரம் கோடியும் கல்யாண-கர்நாடக வளர்ச்சிக்காக செலவிடப்படும். பா.ஜனதா அரசு எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும். 33 லட்சம் விவசாயிகளுக்கு கடன் கிடைக்கும் திட்டம், விவசாயிகள் சக்தி திட்டம் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தும் மோட்டார்கள், பிற எந்திரங்களுக்காக பெட்ரோல், டீசல் போடுவதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.