பகவத் கீதை மூலம் அரசியல் ஆதாயம் தேட பா.ஜனதா முயற்சிக்கிறது; டி.கே. சிவக்குமார் குற்றச்சாட்டு
பகவத் கீதை மூலம் அரசியல் ஆதாயம் தேட பா.ஜனதா முயற்சிக்கிறது என்று டி.கே. சிவக்குமார் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசு ஏற்கனவே தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது. தேசிய கல்வி கொள்கையை கொண்டு வருவதை ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் எதிர்க்கிறது. தேசிய கல்விக் கொள்கையால் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதனால் கர்நாடகத்தில் புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த கூடாது. தற்போது பகவத் கீதையை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு முடிவு செய்திருக்கிறது. பகவத் கீதை மூலம் அரசியல் ஆதாயம் தேட பா.ஜனதா முயற்சிக்கிறது. பகவத் கீதை பற்றி அனைவரும் அறிந்திருக்கிறார்கள்.
ராமாயணம், மகாபாரதம் பற்றியும் தெரியும். அதனை மூடி மறைத்து விட்டு தற்போது பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்க்க பா.ஜனதா முயற்சிக்கிறது. பா.ஜனதாவினர் தங்களுக்கு தேவையானதை செய்கிறார்கள். அவர்கள் சொல்வதே உண்மை என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.