அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
தமிழ்நாடு கல்வித்துறை ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்த இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுசிகுமார் தலைமை தாங்கினார். நடராஜன், ஜெகன்நாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில தலைவர் ஆளவந்தார் கலந்து கொண்டு பேசினார். தேர்தல் வாக்குறுதியில் அளித்ததுபோல் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டதை கருத்தில் கொண்டு கூடுதலாக கண்காணிப்பாளர், ஆசிரியரல்லா பணியாளர் நிலையில் நேர்முக உதவியாளர் பணியிடம் அனுமதித்திட வேண்டும். வட்டார கல்வி அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர் பணியிடங்களை அனுமதித்திட வேண்டும். ஆண்டுதோறும் அடிப்படை பணியாளர் முதல் நேர்முக உதவியாளர் வரை இணைய வழியில் கலந்தாய்வு மூலம் விருப்ப மாறுதல் ஆணை வழங்கிட வேண்டும். இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து பதவி உயர்வு வாயிலாகவே உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரேம் ஆனந்த் வரவேற்றார். முடிவில் பொருளாளர் மணிமாறன் நன்றி கூறினார்.