வீடுகளிலும் வாழிடங்களை ஏற்படுத்தி வாழவிடுவோம், சிட்டுக்குருவிகளை

வீடுகளிலும் வாழிடங்களை ஏற்படுத்தி சிட்டுக்குருவிகளை வாழவிடுவோம்.

Update: 2022-03-19 21:06 GMT
ராஜபாளையம்,
உலக அளவில் வேகமாக அழிந்து வரும் பறவை இனங்களின் பட்டியலில், சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும் இடம் பெற்றுள்ளன.
காகங்களுக்கு அடுத்ததாக, நமக்கு அதிகம் பரிச்சயமான பறவையினமான சிட்டுக்குருவியின் எண்ணிக்கை, நகரமயமாதலால் வேகமாக குறைந்து வருகிறது. கிராமப்புற ஓட்டு வீடுகள், வயல், கண்மாய், குளம், ஏரி கரையோர மரங்கள் போன்றவைதான், சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவிகளின் வாழிடம்.. 
ஆனால் இப்போது கிராமங்களில் கூட ஓட்டு வீடுகள் அரிதாகி போய் விட்டன. வாழ்விடம் இன்றி குருவி இனங்கள் அழிந்து வருகின்றன.
சிறு தானியங்கள் மட்டுமின்றி தாவரங்களில் உள்ள புழு, பூச்சிகளைத்தான் அவை விரும்பி உண்ணும். ஆனால் தானியங்களின் பயன்பாடு குறைந்திருப்பதோடு, பூச்சி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால் புழு, பூச்சிகளும் அவற்றுக்கு உணவாக கிடைப்பதில்லை. 
ஆயுட்காலம் 
சாதாரணமாக 12 முதல்  13 ஆண்டுகள் வரை உயிர் வாழும் சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவிகளுக்கு உணவுப் பற்றாக்குறை, வாழ்விடம் அழிப்பு, பூச்சி மருந்துகள் கலந்த உணவை உட்கொள்வது போன்ற பல காரணங்களால் குறைந்த ஆயுட்காலத்திலேயே மடிந்து போகின்றன. முன்பெல்லாம் சாப்பாடு பாத்திரங்களை கழுவும்போது, அந்த தண்ணீர், பின் புறமுள்ள தோட்டங்களுக்கு பாய்ச்சப்படும். 
சாப்பாடு பாத்திரத்தில் உள்ள உணவு எச்சங்களை சிட்டுக்குருவிகள்  உணவாக உட்கொள்ளும். ஆனால் இப்போது எல்லா வீடுகளிலும் "சிங்க்' எனப்படும் தொட்டிகளில், பாத்திரங்கள் கழுவப்பட்டு, குழாய்களின் வழியாக நேரடியாக சாக்கடைகளுக்கு தண்ணீர் போகும் வகையில் கட்டமைப்புகள் உள்ளன. 
அனைவரின் கடமை 
 செல்போன் கோபுரத்தில இருந்து வெளியாகும் கதர்வீச்சு, குருவிகளின் மெலிதான இதயத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் ஏதுமில்லை என்றும் கூறுகின்றனர். 
வேகமாக அழிந்து வரும் குருவிகளை காப்பாற்ற, ஆண்டுதோறும் மார்ச் 20-ல் உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
கிராமங்கள், நகரங்களில் சிட்டுக்குருவிகளுக்கு வாழ்விடம் தரும் வகையில், செயற்கையான கூடுகளை உருவாக்கி, வீடுகளின் மாடியில் வைக்கலாம். இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. அதில் தானியம், தண்ணீர் ஆகியவற்றை வைத்து பழக்கப்படுத்த வேண்டும். அழிந்து வரும் குருவி இனங்களை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை ஆகும். 
வீடுகளிலும் வாழிடங்களை ஏற்படுத்தி சிட்டுக்குருவிகளை வாழவிடுவோம். 

மேலும் செய்திகள்