பெங்களூருவில் நகைக்கடை உரிமையாளர்களை மிரட்டி கொள்ளை; 2 பேர் கைது
பெங்களூருவில் நகைக்கடை உரிமையாளர்களை மிரட்டி கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு:
சுட்டுவிடுவதாக மிரட்டல்
பெங்களூரு ராஜாஜிநகரை சேர்ந்தவர் ரகுராம். இவர் நகரத்பேட்டையில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரகுராமின் நகைக்கடைக்கு சாமி போல வேடம் அணிந்து ஒருவர் வந்தார். அவர் கையில் ஒரு பையை வைத்து இருந்தார். அந்த நபர் ரகுராமிடம் பேச்சு கொடுத்து அவரது கவனத்தை திசை திருப்பினார்.
இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த இன்னொரு நபர் ரகுராமிடம் பையில் துப்பாக்கி இருக்கிறது. அந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடுவோம் என்று மிரட்டினார். மேலும் நகைகளை எடுத்து பையில் போடும்படி கூறினார். இதனால் ரகுராமும் நகைகளை எடுத்து பையில் போட்டார்.
ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் ரகுராமை மிரட்டி கொள்ளையடித்ததாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராஜா அலி, நாகீர் ஜெய்பீ ஆகியோரை மராட்டிய மாநிலம் நாக்பூரில் வைத்து அல்சூர்கேட் போலீசார் கைது செய்தனர். அவர்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது நகைக்கடை உரிமையாளர்களை குறிவைத்து அவர்களை மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஒரு கிலோ தங்கநகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.