கோலாரில் 14-ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு கண்டுபிடிப்பு
கோலாரில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோலார் தங்கவயல்:
கல்வெட்டு கண்டுபிடிப்பு
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனிவாசப்பூா் தாலுகா லட்சுமிசாகர் கிராமத்தை சேர்ந்தவர் சேகா். விவசாயி. இவருக்கு சொந்தமாக அந்தப்பகுதியில், விவசாய நிலம் அமைந்துள்ளது. இந்த நிலையில் இவரது விளைநிலத்தில் உள்ள முட்புதரில் பழங்கால கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டு தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து கிராம மக்கள், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தொல்லியல் ஆய்வாளா் நரசிம்மன் அந்த நிலத்துக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ் கல்வெட்டு
இந்த ஆய்வுக்கு பிறகு அவர் அவர் கூறியதாவது:-
விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டு 14-ம் நூற்றாண்டை சேர்ந்தது. இது மிகவும் பழமையான கல்வெட்டாகும். மேலும், இ்ந்த கல்வெட்டில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உள்ளது. எனவே இது வரலாற்று சிறப்பு கொண்ட கல்வெட்டாகும். இதில் ‘சாமகொண்ணன் மகன் கங்கைய்யநாயக் தேவ பெருமாளுக்கு தானமாக வழங்கியது’ என எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை உதவி தொல்லியல் ஆய்வாளர்களுடன் கலந்து ஆலோசித்து ஆராய்ச்சி ெசய்யப்படும்.
மேலும், இங்குள்ள பழங்கால கோயில் சுவர்கள் நல்ல நிலையில் உள்ளது. கல்வெட்டில் எழுதி வைத்து இருக்கும் வாசகம் கோவில் மூலவருக்கு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.
இதுவரை இந்த தாலுகாவில் பல்வேறு சங்கதிகள் தொடர்பான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவை தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உள்ளன. மேலும், நினைவு தூண்கள் உட்பட பல்வேறு கல்வெட்டுகள் கிடைத்து வருகிறது. இதை பாதுகாக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.