ஹிஜாப் விஷயத்தில் கோர்ட்டு தீர்ப்பை எதிர்க்க கூடாது; எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அறிவுரை
ஹிஜாப் விஷயத்தில் கோர்ட்டு தீர்ப்பை எதிர்க்க கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.
மங்களூரு:
கோர்ட்டு தீர்ப்பை எதிர்க்க கூடாது
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு நேற்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வந்தார். அவர் மங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரசிலும் இந்துத்துவா உண்டு. அனைத்து மதத்தினரையும் காங்கிரஸ் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறது. ஹிஜாப் விஷயத்தில் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கோர்ட்டு தீர்ப்பை எதிர்க்க கூடாது. இந்து, முஸ்லிம் என்ற பேதம் இருக்க கூடாது. அனைத்து மதமும் ஒன்றே. அனைத்து மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும்.
ஆட்சேபனை இல்லை
பள்ளி பாடத்திட்டத்தில் குர் ஆன், பகவத் கீதை, பைபிள்களில் உள்ளவற்றை கற்பிப்பதற்கு காங்கிரசின் ஆட்சேபனை இல்லை. ஆனால் குழந்தைகளுக்கு தரமான கல்வி கற்பிக்கப்பட வேண்டும். அதுதான் காங்கிரசின் நோக்கம். அரசியல் அமைப்பின் மதசார்பற்ற கொள்கைகளை நாங்கள் நம்புகிறோம். குஜராத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை கொண்டு வந்துள்ளனர். அதேபோல் கர்நாடகத்திலும் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை கொண்டுவர கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது.
ஆனால் அதுபற்றி அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. தார்மீக கல்வி தேவை என்பதே காங்கிரசின் நோக்கம். அரசியல் அமைப்பிற்கு எதிராக எதுவும் இருக்க கூடாது.
திரைப்படம் பார்ப்பவன் அல்ல
நான் பகவத் கீதை, பைபிள், குர் ஆன் ஆகியவற்றை எதிர்ப்பவன் அல்ல. நமது நாடு பன்முக கலாசாரத்தை கொண்ட நாடு. நாம் ஒன்றாக வாழ வேண்டும். நான் சகிப்புத்தன்மை, சக வாழ்வை நம்புகிறேன். ‘காஷ்மீர் பைல்ஸ்’ படத்தைப் பற்றி பேசுகிறவர்கள் உண்மையை பேச வேண்டும். திரைப்படத்தில் உண்மையை காட்டுங்கள்.
குஜராத் சம்பவம், லக்கின்பூர் சம்பவம் ஆகியவற்றையும் திரைப்படமாக எடுத்து வெளியிடுங்கள். நான் திரைப்படம் பார்ப்பவன் அல்ல. குறிப்பாக தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்ப்பவன் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.