குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அந்தியூர் அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூர் அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
அந்தியூர் அடுத்த பட்லூர் அருகே உள்ள கிராமம் சொக்கநாதமலையூர். இந்த பகுதியில் கடந்த ஒரு வார காலமாக வெள்ளித்திருப்பூர்- சென்னம்பட்டி செல்லும் வழியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக சொக்கநாதமலையூர் கிராமத்துக்கு குடிநீர் சீராக வினியோகிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை 7 மணி அளவில் சொக்கநாதமலையூரில் உள்ள ஒலகடம்- வெள்ளித்திருப்பூர் ரோட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் குடிநீர் சீராக வினியோகிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி குகநாதன், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், வெள்ளித்திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பட்லூர் ஊராட்சி தலைவர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த ஒரு வாரமாக எங்கள் பகுதிக்கு குடிநீர் சரியாக வரவில்லை. மேலும் வருகின்ற குடிநீரும் கலங்கலாக உள்ளது. இதனால் நாங்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
அதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறுகையில், ‘விரைவில் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
இதில் சமரசம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு 8 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாைல மறியல் போராட்டத்தால் ஒலகடம்- வெள்ளித்திருப்பூர் ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.