மின் வாரிய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
மின் வாரிய அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மின் வாரிய அலுவலர் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோபி திட்ட தலைவர் பஞ்சயன் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் பாவலன், சேலம் மண்டல செயலாளர் நாவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச்செயலாளர் பகுத்தறிவன், மாநில துணைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
கேங்மேன் தொழிலாளர்களின் பயிற்சி காலத்தை ஓராண்டாக குறைக்க வேண்டும். கேங்மேன் பதவியை ரத்து செய்து, கள உதவியாளராக அறிவித்து அரசாணை வழங்க வேண்டும். கேங்மேன் பணியை வரையறை செய்து, தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கே பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும். விடுபட்ட 5 ஆயிரத்து 336 கேங்மேன்களுக்கு பணியானை வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச்செயலாளர்கள் மனோகரன், சாதிக், கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், நகர செயலாளர் அம்ஜத்கான், மாவட்ட அமைப்பாளர் ஜாபர் அலி, நிர்வாகிகள் முடியரசு, குணவளவன், முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.