மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கூடாது ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-19 20:12 GMT
குழித்துறை, 
மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 2 நாள் குமரி மாவட்ட மாநாடு நேற்று மார்த்தாண்டம் வெட்டுமணியில் தொடங்கியது. 
இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநில மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில மாநாடு மதுரையில் வருகிற 30,31, ஏப்ரல் 1-ந் தேதி ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. அதில் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். மாநில மாநாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.
கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை கேரளா மாநிலம் கண்ணூரில் நடைபெற உள்ளது.
பட்ஜெட் அறிவிப்புக்கு வரவேற்பு
தமிழக சட்டசபையில் நிதி அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் உள்ள சில திட்டங்கள் வரவேற்கும் படியாக உள்ளது. பள்ளிக் கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, வேளாண்துறைக்கு கூடுதல் முதலீடு, அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தது வரவேற்புக்குரியது.
பயிர்க்கடன், நகைக்கடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தொகையை தள்ளுபடி செய்வதற்காக ரூ.4 ஆயிரத்து 131 கோடி ஒதுக்கி இருப்பது பாராட்டுக்குரியது. அதே சமயத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவிகளுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.
திருமண உதவி திட்டம்
மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். அதனை கைவிட்டு விடக்கூடாது. அரசு போக்குவரத்து கழக பஸ்களில் மாணவர்களுக்கும், பெண்களுக்கும் வழங்கப்படும் இலவச பயண சலுகையால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய அரசு போக்குவரத்து கழகத்திற்கு அந்த தொகையை வழங்க வேண்டும்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த மாநாட்டில் முன்னாள் மாவட்ட செயலாளர் முருகேசன் கொடியேற்றி வைத்தார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் தலைமை தாங்கினார். மாதவன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் செல்லசாமி அறிக்கை வாசித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. நூர்முகமது மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

மேலும் செய்திகள்