பிற்படுத்தப்பட்டோர் விடுதி மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி
சேலத்தில் பிற்படுத்தப்பட்டோர் விடுதி மாணவ- மாணவிகளுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சேலம்:-
சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டல் நிகழ்ச்சி அழகாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் லதா தலைமை தாங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலிங்கம் முன்னிலை வகித்தார். நில எடுப்பு தனி தாசில்தார் ஜாகீர் உசேன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்புத்துறை மண்டல துணை இயக்குனர் மணி, தொழில் நெறிவழிகாட்டு மைய அலுவலர் உஷா நந்தினி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது அவர்கள், 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பிறகு மாணவர்களுக்கான உயர்க்கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புக்கு தகுந்தபடி தங்களை தயார்படுத்திக் கொள்வது எப்படி? என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.