வனத்துறை கட்டிட சுவர் இடிந்து தொழிலாளி நசுங்கி பலி
பாபநாசம் அருகே வனத்துறைக்கு சொந்தமான பழைய கட்டிட சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உடல் நசுங்கி பலியானார்.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் அருகே வனத்துறைக்கு சொந்தமான பழைய கட்டிட சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உடல் நசுங்கி பலியானார்.
வனத்துறை கட்டிடம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே காரையாறு பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான பழைய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளியாக விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டானா அனவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த திருமலைச்சாமி (வயது 50) என்பவர் உள்பட 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சுவர் இடிந்து பலி
நேற்று வழக்கம் போல் கட்டிடத்தை இடிக்கும் பணியில் திருமலைச்சாமி உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். டிரில்லர் எந்திரம் கொண்டு கட்டிடத்தை இடித்துக் கொண்டு இருக்கும்போது, திடீரென்று கட்டிடத்தின் சுவர் இடிந்து திருமலைச்சாமி மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் உடல் நசுங்கி பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உடனடியாக விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, திருமலைச்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடும்பம்
பலியான திருமலைச்சாமிக்கு பூமாரி என்ற மனைவியும், வசந்தகுமார், முத்துக்குமார், அஜித்குமார் ஆகிய மகன்களும் உள்ளனர். முதல் 2 மகன்களுக்கும் திருமணமாகிவிட்டது. அஜித்குமார் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
பாபநாசம் அருகே வனத்துறைக்கு சொந்தமான பழைய கட்டிட சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.