நிலுவைெதாகையை முழுமையாக கொடுத்து இருப்பதாக உண்மையை கூறியுள்ளனர்-மதுரையில் அண்ணாமலை பேட்டி
எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோடுகிறவர்கள், நிலுவை தொகையை முழுமையாக கொடுத்து இருப்பதாக பட்ஜெட்டில் உண்மையை கூறியுள்ளனர் என்று மதுரையில் அண்ணாமலை கூறினார்.
மதுரை,
எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோடுகிறவர்கள், நிலுவை தொகையை முழுமையாக கொடுத்து இருப்பதாக பட்ஜெட்டில் உண்மையை கூறியுள்ளனர் என்று மதுரையில் அண்ணாமலை கூறினார்.
பேட்டி
மதுரை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசின் கடன் தொகை ரூ.6 லட்சம் கோடியை தாண்டி சென்றுள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. ரூ.7000 கோடி வருவாய் ஈட்டி கடனை குறைத்ததாக காட்டுகிறார்கள். ஆனால், தமிழக பட்ஜெட், வார்த்தை ஜாலத்தால் எழுதப்பட்ட பகல் கனவாக இருக்கிறது.
பட்ஜெட்டின் மூலம் தமிழக மக்களை கடுமையான கடன் சுமையில் ஆழ்த்துகிறார்கள். தற்போது அறிவித்துள்ள பட்ஜெட்டால் எந்த ஒரு பயனும் இல்லை. இப்படியே இருந்தால் இனி வரும் ஆண்டுகளில் அரசு ரூ.80,000 கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடனை குறைத்து வித்தியாசமான பட்ஜெட்டை அமல்படுத்துவதாக சொல்லிவிட்டு இப்படியொரு வெற்று பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு 1000 ரூபாய் கொடுப்போம், கியாஸ் விலையை குறைப்போம் என்று கூறிய தி.மு.க. அரசு அதனை செய்யவில்லை. அரசு பள்ளி மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
நிலுவை தொகை
மத்திய அரசு, தமிழக அரசுக்கு நிலுவைத்தொகையை முழுமையாக கொடுத்ததால் வருவாய் வந்துள்ளதாக தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக பட்ஜெட்டில் உண்மையை கூறியுள்ளது. மத்திய அரசைப் பொறுத்தவரை எந்த ஒரு மாநிலத்திற்கும் நிலுவைத்தொகையை நிறுத்தவும், பாரபட்சமும் காட்டமாட்டார்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது பழிபோடும் நிலையில், தமிழக பட்ஜெட்டில் அதுபற்றிய உண்மையை எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.
மத்திய அரசின் நிறைய திட்டங்களுக்கு தமிழக அரசு புதிய பெயர் சூட்டி இருக்கிறது. எத்தனை புதிய பெயர் சூட்டினாலும் அந்தத் திட்டங்களால் தமிழக மக்கள் பயன் பெற வேண்டும்.
கவர்னரிடம் புகார்
மின்திட்டம் வழங்கப்பட்டது தொடர்பாக தனியார் நிறுவனத்தின் மீது முதலில் வருமான வரி சோதனை நடத்த வேண்டும். இந்த ஊழல் தொடர்பாக கவர்னரை சந்தித்து புகார் அளிக்க இருக்கிறோம். ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து வித்தியாசமான அரசு என்பதை தி.மு.க. மக்களுக்கு நிரூபித்து காட்ட வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர் பதவிக்கு போட்டி போடுவதற்கு ஆட்கள் அதிகமாக உள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களை வென்று, மத்தியில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.