ஆசிரியர் சிக்கன நாணய சங்கத்தில் ரூ.24¾ லட்சம் முறைகேடு

கொளத்தூரில் உள்ள ஆசிரியர் சிக்கன நாணய சங்கத்தில் காசோலைகளை திருத்தி ரூ.24¾ லட்சம் முறைகேடு செய்ததாக சங்க தலைவர் மற்றும் செயலாளரை வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-19 19:01 GMT
சேலம்:-
கொளத்தூரில் உள்ள ஆசிரியர் சிக்கன நாணய சங்கத்தில் காசோலைகளை திருத்தி ரூ.24¾ லட்சம் முறைகேடு செய்ததாக சங்க தலைவர் மற்றும் செயலாளரை வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
முறைகேடு
சேலம் மாவட்டம் கொளத்தூரில் யூனியன் பணியாளர் மற்றும் ஆசிரியர்கள் சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு ஓமலூர் சரக துணை பதிவாளர் சுவேதா மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது பல்வேறு வகைகளில் ரூ.24 லட்சத்து 91 ஆயிரம் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சங்க செயலாளரான நங்கவள்ளி அருகே உள்ள குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த சிட்டி முருகன் (வயது 52) என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
2 பேர் கைது
அதன்பேரின் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், காசோலைகளை திருத்தி ரூ.24 லட்சத்து 91 ஆயிரம் முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த முறைகேடு தொடர்பாக சங்கத்தின் தலைவரான தின்னம்பட்டியை சேர்ந்த பிரபு (48) மற்றும் செயலாளர் சிட்டி முருகன் ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்