யூடியூப்பை பார்த்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர் கைது

மல்லூர் அருகே பணத்ைத கொள்ளையடிக்க யூடியூப் சேனலை பார்த்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-19 19:01 GMT
பனமரத்துப்பட்டி:-
மல்லூர் அருகே பணத்ைத கொள்ளையடிக்க யூடியூப் சேனலை பார்த்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தனியார் வங்கி ஏ.டி.எம்.
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நிலவாரப்பட்டி கிராமத்தில் சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே அந்த வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் காவலாளி இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் 16-ந் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளான். அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்த அலாரம் ஒலிக்க தொடங்கியவுடன் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். 
கைது 
இதனிடையே ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க தொடங்கியவுடன் வங்கியின் மேலாளர் செல்போனுக்கு குறுந்தகவல் சென்றுள்ளது. இதையடுத்து அவர் மல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும் சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். 
இந்தநிலையில் நேற்று பனமரத்துப்பட்டி அருகே உள்ள பெரமனூர் ஊராட்சி மானியகாடு பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகன் விஜயகுமார் (வயது 20) என்பவரை போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றதாக கைது செய்தனர். 
யூடியூப்பை பார்த்து முயற்சி
இது குறித்து போலீசார் கூறும் போது, கைது செய்யப்பட்ட விஜயகுமார் சேலத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பணத்தின் மீது உள்ள ஆசையின் காரணமாக யூடியூப்பில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து எவ்வாறு கொள்ளையடிப்பது என்பதை பார்த்துள்ளான். அதே முறையில் இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளான். அப்போது அங்கு அலாரம் அடிக்கவே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விஜயகுமார் கைது செய்யப்பட்டான் என்றனர்.
பணத்தின் மீது கொண்ட ஆசையின் காரணமாக யூடியூப்  சேனலை பார்த்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கொள்ளையடிக்க முயன்றவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்