தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2022-03-19 19:01 GMT
திருச்சி

பயனற்ற ஆழ்துளை கிணறு 
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி 11-வது வார்டை சேர்ந்த இந்திராநகர், அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கான மயானத்தில்  ஈமச்சடங்கு செய்ய வசதியாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுக்கான மின் மோட்டார் மற்றும் நீர்த்தேக்க தொட்டி அகற்றப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது.  இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பச்சபெருமாள்பட்டி, திருச்சி. 

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் 
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், வளநாடு கைகாட்டியில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக கறிக்கடைகளில் சேகரமாகும் கோழிக்கழிவுகளை அதிகமாக  கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதனை உண்பதற்கு நாய்கள் இப்பகுதியில் அதிகம் கூடுவதினால் இந்த சாலை வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவே பெரிதும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
செந்தில்குமார்,  வளநாடு கைகாட்டி, திருச்சி. 

வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி கே.கே.நகரைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட புறநகர்ப் பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியூர் செல்ல கே.கே.நகர் பஸ் நிலையத்திற்கு தங்களின் இருசக்கர வாகனத்தில் வருகின்றனர். பின்னர் அவர்கள் இருசக்கர வாகனங்களை பஸ் நிலையம் அருகே நிறுத்தி விட்டு பஸ் மூலம் வெளியூர் செல்கின்றனர். பின்னர் அங்கு பணி முடிந்து வந்து தங்களது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்கின்றனர். இதனால் அவர்கள் நிறுத்திவிட்டு செல்லும் இருசக்கர வாகனங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 
புருஷோத்தமன், கே.கே.நகர், திருச்சி.

மேலும் செய்திகள்