பொன்னமராவதி அருகே தேனிமலையில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு

பொன்னமராவதி அருகே தேனிமலையில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

Update: 2022-03-19 18:39 GMT
பொன்னமராவதி:
ஜல்லிக்கட்டு 
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேனிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேனிமலையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். பாரம்பரிய முறைப்படி ஊர் ஜவுளி எடுத்துவரப்பட்டு கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைதொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 
 இதில் 167 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 722 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 
பரிசு
காளைகள் முட்டியதில் 14 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. 
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், பீரோ, கட்டில், குக்கர், டி.வி., மின்விசிறி, மிக்சி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. 
ஜல்லிக்கட்டை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்