பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில் தேரோட்டம்-திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.;
பரமத்திவேலூர்:
தேரோட்டம்
பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் கரட்டூரில் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து 13-ந் தேதி வரை சாமி திருவீதி உலா நடந்தது. 14-ந் தேதி மயில் வாகனத்திலும், 15-ந் தேதி யானை வாகனத்திலும் எழுந்தருளி வடபழனி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
16-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் மாலை பூ பல்லக்கு உற்சவமும் நடந்தது. நேற்று முன்தினம் பங்குனி உத்திரத்தையொட்டி அதிகாலை 5 மணிக்கு மேல் சாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மாலை 4 மணிக்கு நடந்தது.
சத்தாபரணம்
இதில் பிலிக்கல்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், பின்னர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி விஜயகிரி வடபழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நேற்று மாலை சத்தாபரணம் நடந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.