விவசாயிகளின் நெல் மூடைகளை வாங்க மறுப்பு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூடைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூடைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவு துறை இணை பதிவாளர் ஜினு, வேளாண்மை துறை உதவி இயக்குனர் பன்னீர்செல்வம், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் நத்தர்ஷா, மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: சந்திரன்: விவசாயி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல்லை எடுக்க மறுக்கின்றனர். குறிப்பிட்ட சில விவசாயிகள் மட்டுமே கொள்முதல் நிலையம் அமைத்து பயன் அடைந்து உள்ளனர்.
சாக்கு இல்லை
விவசாயிகள் பயன்பட வேண்டும் என்பதற்காக முதல்- அமைச்சர் தொடங்கிய இந்த திட்டத்தின் நோக்கமே முழுமை அடையவில்லை. கொள்முதல் நிலையங்களில் சாக்கு இல்லை என்று கூறி விடுகின்றனர். மாவட்டத்தில் ஏராள மான இடங்களில் கொள்முதல் நிலையங்களை மூடி வைத்து உள்ளனர். எனவே இதை சரி செய்ய வேண்டும் என்றார்.
கலெக்டர்: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 53 இடங்களில் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 62 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 15 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. ஆன்லைனில் பதிவு செய்த விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதிக்கு முன்னதாகவே நெல்லை கொண்டு வந்து விடுகின்றனர். இதனால்தான் அவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
ராஜேந்திரன் சாலை கிராமம், மற்றும் விவசாயிகள்:
சிவகங்கை மாவட்டத்தில் கீழே நெட்டூர், மிளகனூர், கண்டனி உள்பட பல்வேறு இடங்களில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு இல்லை என்று கூறி நெல்லை எடுக்க மறுக்கின்றனர். மேலும் கொள்முதல் நிலையங்களில் அதிகாரம் லோடு மேன்கள் வசம்தான் உள்ளது ஒரு மூடைக்கு அவர்கள் 45- லிருந்து 50 வரை வசூலிக்கின்றனர் என்றனர்.
அய்யாசாமி: வைகை அணையில் சிவகங்கை மாவட்டத்திற்கு உரிய பங்கை கடந்த ஆண்டே எடுக்கவில்லை. தற்பொழுது நமது பங்கேற்று நீர் உள்ளது. அதை தற்போது எடுத்து தர வேண்டும். மேலும் 2-ம் போக பருத்தி சாகுபடி செய்வதை பதிவு செய்ய வேண்டும். அத்துடன் பருத்தி சாகுபடி செய்பவர்களுக்கு இடுபொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு பருத்தி பயிரிட கடன் வழங்க வேண்டும் என்றனர்.
கடன்
கலெக்டர்: ஏற்கனவே விவசாய கடனுக்கு ஒரு நபருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கும் கடன் வாங்கியிருந்தால் மீதம் உள்ள தொகையை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பல்வேறு பொருட்கள் மீது விவாதம் நடைபெற்றது.
முன்னதாக வேளாண்மை துறையின் சார்பில் வெளியிடப ்படும் உழவர் இதழ் என்ற புத்தகத்தை கலெக்டர் வெளியிட்டார் அத்துடன் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்களையும் அவர் வழங்கினார்.