சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர சப்பர பவனி
மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர சப்பர பவனி நடந்தது.;
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே மறுகால்தலை கிராமத்தில் உள்ள பூலுடையார் சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பங்குனி உத்திர திருவிழாவான நேற்று முன்தினம் மதியம் கொடை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கிடா வெட்டி வழிபட்டனர். மேலும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தல், பால்குடம், அக்னி சட்டி, மாவிளக்கு எடுத்தல், சப்பர பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
பக்தர்கள் 300 அடி உயர மலை மீது படியில் ஏறிச்சென்று தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பூலுடையார் சாஸ்தா கோவில் அறக்கட்டளையினர் நீர்மோர், அன்னதானம் வழங்கினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.