சமூக வலைதளத்தில் பரவும் விவசாயியின் கண்ணீர் வீடியோவால் பரபரப்பு

நெல் கொள்முதல் தொடர்பாக சமூக வலைதளத்தில் பரவும் விவசாயியின் கண்ணீர் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-03-19 16:59 GMT
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி பகுதியில் ஏராளமான விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர். தற்போது நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்பனைக்காக வைத்துள்ளனர். இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லில் ஈரப்பதமாக இருப்பதாக கூறி, அவற்றை கொள்முதல் செய்ய மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அத்திமரப்பட்டியை சேர்ந்த விவசாயி கணேசமணி கண்ணீர்மல்க பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் அவர், ‘‘நான் 6 மூட்டை விதை நெல்லை விதைத்து பயிரிட்டு இருந்தேன். அதிக மழையால் பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்தன. எனினும் தண்ணீரை வடிய வைத்து பயிர்களை காப்பாற்றினோம். பின்னர் அறுவடைக்கு எந்திரம் கிடைக்க தாமதமான நேரத்தில் பெய்த மழையால் மீண்டும் நெற்பயிர்கள் நனைந்தன. தற்போது அறுவடை செய்த நெல்லை வாங்க மறுக்கின்றனர். இனி வயல்களை பிளாட் போட்டு விற்பனை செய்து விடலாம் என்று நினைக்க தோன்றுகிறது. அவ்வாறு செய்தால் மக்கள் உணவுக்கு என்ன செய்வார்கள்? விவசாயிகளுடன் விவசாயமும் அழிந்து வருகிறது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தி இருக்கிறார். 

மேலும் செய்திகள்