கம்பைநல்லூரில் ரேஷன் கடை ஊழியர் மர்ம சாவு மயானத்தில் பிணமாக கிடந்தார்

கம்பைநல்லூரில் ரேஷன் கடை ஊழியர் மர்மமான முறையில் மயானத்தில் பிணமாக கிடந்தார்.;

Update: 2022-03-19 16:58 GMT
மொரப்பூர்:
கம்பைநல்லூரில் ரேஷன் கடை ஊழியர் மர்மமான முறையில் மயானத்தில் பிணமாக கிடந்தார்.
ரேஷன் கடை ஊழியர்
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 58). இவர் கம்பைநல்லூர் அருகே உள்ள கெலவள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 17-ந்தேதி மாலை நண்பரிடம் பணம் வாங்கி வருவதாக மனைவிடம் கூறி விட்டு சென்றவர் இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது மனைவி சகுந்தலா மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசில் சகுந்தலா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மயானத்தில் பிணம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கம்பைநல்லூர் மயானத்தில் ரத்தினம் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரத்தினம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரேஷன் கடை ஊழியர் மயானத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்