தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைக்கும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைக்கும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.
கூட்டம்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாவட்டத்தை பிளாஸ்டிக் மாசில்லா மாவட்டமாக உருவாக்குவதற்கான முதன் பணிக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வை அவர் தொடங்கி வைத்தார்.
இதில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடாசலம் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள், கல்வித்துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
முழு ஒத்துழைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை காப்பது நம் கடமை என்ற உணர்வோடு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உணவு பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை, தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காதித குவளைகள், தேநீர் குவளைகள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள் ஆகிய பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைக்கும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.