கிருஷ்ணகிரியில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதித்தது. கர்நாடக அரசின் தடையை கர்நாடக உயர்நீதிமன்றம் செல்லும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பையும் கர்நாடக அரசையும் கண்டித்து இஸ்லாமிய சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் கிருஷ்ணகிரி அஹ்லே சுன்னத் வல் ஜமாத் சொசைட்டி எனப்படும் அனைத்து ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து ஜமாத் தலைவர் சையத் இர்பானுல்லா உசைனீ தலைமை தாங்கினார். செயலாளர் ஆசாத் மற்றும் அனைத்து ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக அரசையும் உயர்நீதிமன்றத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நூர் முகமது, தவுலத்பாத் ஜமாத் செயலாளர் அஸ்லம், நவ்சாத், முகமது ஆசாத், காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் அப்சல், முன்னாள் நகர தலைவர் ரகமத்துல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் குப்தார் அகமத் நன்றி கூறினார்.