தூத்துக்குடியில் 1,053 பேருக்கு பணி நியமன ஆணை; கனிமொழி எம்.பி. வழங்கினார்
தூத்துக்குடியில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 1,053 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பணி நியமன ஆணையை வழங்கினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நேற்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு இல்லாத அனைவரும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் சென்னை, கோவை உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து 100 நிறுவனங்கள் கலந்து கொண்டன.
முகாமில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் 2,193 பேர் கலந்துகொண்டனர். இதில் 1,053 பேர் தேர்வு செய்யப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு துணை இயக்குனர் மகாலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, தனியார் நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘தமிழக அரசு உத்தரவுப்படி மாவட்டம்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமை இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு இடத்தில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனத்தினர் அவர்களாகவே முன்வந்து வேலைவாய்ப்பு அளிக்கின்றனர். இந்த வாய்ப்பை நாம் தயக்கமில்லாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை அடுத்த மேல ஆத்தூர் கிராம பஞ்சாயத்து பகுதியில் உள்ளது குச்சிக்காடு கிராமம். இ்ங்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள், ஆகாயத்தாமரை தண்டில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அதாவது கைவினை ெபாருட்களை உருவாக்கி வருகின்றனர். இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள், கூடை, தட்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கலைநயத்துடன் செய்து அசத்துகின்றனர்.
இந்த நிலையில் கனிமொழி எம்.பி., கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் நேற்று அங்கு வந்தனர். அவர்கள் ஆகாயத்தாமரை தண்டில் இருந்து கைவினை பொருட்கள் தயாரிக்கும் பணியை நேரில் பார்வையிட்டு மகளிர் சுயஉதவிக்குழுவினரை பாராட்டினார்கள். மேலும், அந்த பொருட்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது? என்பது குறித்து ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனத்தின் பயிற்சியாளர் ரமணாதேவி விளக்கி கூறினார்.