10 ஆண்டுகளுக்கும் மேலாக வரி பாக்கி செலுத்தாத 100 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
விருத்தாசலம் நகராட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வரிபாக்கியை செலுத்தாத 100 வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்து நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது
விருத்தாசலம்
ரூ.13 கோடி வரி பாக்கி
விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக வீட்டு வரி, தொழில் வரி, காலிமனை வரி, குடிநீர் வரி, கடை வரி உள்ளிட்ட வரி பாக்கியை பொதுமக்கள் செலுத்தாமல் இருந்து வந்ததால், நகராட்சிக்கு ரூ.13 கோடி வரி பாக்கி நிலுவையிலேயே இருந்து வருகிறது. இதன் காரணமாக நகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய முடியாத சூழ்நிலையில் நகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்து வருகிறது.
குடிநீர் இணைப்பு துண்டிப்பு
இதையடுத்து நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் வரி கட்டாத மற்றும் முறைகேடாக எடுத்த குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியை நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையிலான அதிகாரிகள், ஊழியர்கள் மேற்கொண்டனர்.
இதில் நகராட்சிக்குட்பட்ட முல்லை நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வரி பாக்கி வைத்துள்ள, முறைகேடாக எடுத்த குடிநீர் இணைப்புகளை நகராட்சி ஊழியர்கள் துண்டித்தனர்.
அனுமதியின்றி குடிநீர் இணைப்பு
பின்னர் இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஜெயபிரகாஷ் நாராயணன் கூறும்போது, அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள் எடுத்து இருந்தால் நகராட்சியை அணுகி குடிநீர் கட்டணத்தை உடனே செலுத்தி சரி செய்து கொள்ள வேண்டும். அதேபோல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, குப்பை வரி, கடைகளுக்கான வாடகை கட்டணம் உள்ளிட்ட வரி பாக்கி வைத்துள்ளவர்கள் உரிய கட்டணத்தை நகராட்சி நிர்வாகத்திடம் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். வரி செலுத்தாதவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் குடிநீர் குழாய்களில் மின்மோட்டாரை பொருத்தி குடிநீரை உறிஞ்சி எடுப்பவர்கள் மின் மோட்டார்களை உடனடியாக அகற்றி கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார்.
அப்போது குழாய் பொருத்துநர் ரங்கபாஷ்யம், இளநிலை உதவியாளர் குளோரி, பில் கலெக்டர் ஏழுமலை மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.