33 அடி உயர தேரை தோளில் சுமந்து சென்ற பக்தர்கள்
மேல்பாதி கிராமத்தில் 33 அடி உயரமுள்ள தேரை பக்தர்கள் தோளில் சுமந்து சென்றனர். தேர் வீதிகளில் சுற்றி வந்ததை கண்டு கிராம மக்கள் பரவசமடைந்தனர்.;
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே மேல்பாதி கிராமத்தில் திரவுபதியம்மன், தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் விநாயகர், திரவுபதி, அர்ச்சுனன், மகா விஷ்ணு ஆகிய சுவாமிகள் வீதியுலா நடந்தது. 15-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி திரவுபதி அம்மன், அர்ச்சுனன், மகாவிஷ்ணு, விநாயகர் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
33 அடி உயர தேர்
அலங்கரிக்கப்பட்ட தேரில் அர்ச்சுனன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் 33 அடி உயரமுள்ள தேரை பக்தர்கள், தங்களது தோளில் சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக கோட்டைக்கு கொண்டு சென்றனர். வீதிகளில் சுற்றிவந்த தேரை கண்டு கிராம மக்கள் வழிபட்டு, பரவசம் அடைந்தனர்.
பின்னர் மகாபாரதம் சொற்பொழிவு, கோட்டையை கலைப்பது மற்றும் அரவான் பலி நடந்தது. இதனை தொடர்ந்து தேரை பக்தர்கள் மீண்டும் தோளில் சுமந்து கோவிலுக்கு சென்றனர். பின்னர் அம்மனுக்கு கூழ் வார்த்தல் மற்றும் தீமிதி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.