கோவை
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு விமானநிலையத்தில் தி.மு.க.வினர் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில், கோவை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் 70 பேர் மற்றும் உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் அவர் கோவை அவினாசி ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்கினார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, கோவை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, டாக்டர் வரதராஜன், இளைஞர் அணி துணை செயலாளர் பைந்தமிழ்பாரி, மேயர் கல்பனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.