பசுமை சாம்பியன் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பசுமை சாம்பியன் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டா் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 2 தனி நபர்கள் அல்லது நிறுவனங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தேர்வு செய்யும்.
இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட குறுந்தகடு ஆகியவை உள்ளடக்கிய உறையின் மேல் பசுமை சாம்பியன் விருது என குறிப்பிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பசுமை சாம்பியன் விருதிற்கு விண்ணப்பிக்க தற்போது வருகிற 31-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகி விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.