குளக்கரையின் சாலையில் ஏற்படும் மண்சரிவால் விபத்து

வலங்கைமான் அருகே குளக்கரையின் சாலையில் ஏற்படும் மண்சரிவால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-03-19 15:47 GMT
வலங்கைமான்:
வலங்கைமான் அருகே குளக்கரையின் சாலையில் ஏற்படும் மண்சரிவால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
விருப்பாட்சிபுரம் ஊராட்சி 
வலங்கைமாைன அடுத்து விருப்பாட்சிபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான குளக்கரையில் சாலை உள்ளது. இந்த சாலையை அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் விருப்பாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கூட்டுறவு அங்காடி, கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளது. 
மண் அரிப்பு 
இந்த குளக்கரையில் தடுப்புச்சுவர் இல்லாததால் சாலையோரத்தில் திடீரென மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது. மண் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சிலநேரங்களில் குளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்தை தடுக்கும் வகையில் வலங்கைமான் அருகே குளக்கரையின் சாலையில் ஏற்பட்டுள்ள மண்அரிப்பை சீரமைத்து குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
----

மேலும் செய்திகள்