வேதாரண்யம் கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை
கோட்டூர் அருகே விக்கிரபாண்டியம் பகுதிக்கு வேதாரண்யம் கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்:
கோட்டூர் அருகே விக்கிரபாண்டியம் பகுதிக்கு வேதாரண்யம் கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆழ்துளை கிணறு
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட விக்கிரபாண்டியம் தெற்கு தெருவில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் மக்களின் குடிநீர் தேவைக்காக அரசு சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின் மோட்டார் உதவியுடன் சிறிய நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. நிலத்தில் உப்புத்தன்மை அதிகம் இருப்பதால் நீரில் கரிப்பு தன்மை அதிகரித்தது. இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் உகந்ததாக இல்லை.
3 கிலோ மீட்டர் தூரம்
இதனால் தெற்குதெரு பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு இந்த உப்பு நீரை பயன்படுத்தி வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆழ்துளை கிணறு உரிய பராமரிப்பு இல்லாமல் போனதால், தற்போது ஆழ்துளை கிணறு, மின் இணைப்பு மற்றும் சிறிய நீர்த்தேக்க தொட்டி ஆகியவை பழுதடைந்து கிடக்கிறது. நல்ல குடிநீருக்காக விக்கிரபாண்டியம் தெற்குதெரு பகுதி மக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அங்குள்ள கைப்பம்பில் குடிநீர் பிடித்து வருகின்றனர். தற்போது இந்த கைப்பம்பும் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி முதியவர்கள், பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வேதாரண்யம் கூட்டு குடிநீர்
அதேபகுதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குட்டை மற்றும் வாய்க்கால்களில் சென்று வீணாகிறது. உடைப்பு ஏற்பட்ட தண்ணீர் குழாய் இதுவரை சரி செய்யப்படவில்லை. மேலும் இந்த தண்ணீரும் அதிக உப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கோட்டூரில் செல்லும் வேதாரண்யம் கூட்டு குடிநீர் குழாயிலிருந்து சோழங்கநல்லூர், மேலபுழுதிக்குடி, ராமச்சந்திராபுரம் ஆகிய வழித்தடத்தில் குழாய் அமைத்து விக்கிரபாண்டியம் தெற்கு தெருவிற்கு குடிநீர் வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---