விவசாயிகளின் நலன் சார்ந்த வேளாண் பட்ஜெட்
விவசாயிகளின் நலன் சார்ந்த அறிவிப்புகளுடன் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தேனி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கருத்து தெரிவித்தனர்.
தேனி:
விவசாயிகளின் நலன்
தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வேளாண் பட்ஜெட் குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
கண்ணன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர்):- தமிழக வேளாண் பட்ஜெட்டில் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. பாரம்பரிய தோட்டக்கலை பயிர்களை மீட்டெடுத்தல், பாரம்பரிய உள்நாட்டு மீன் இனங்களை வளர்த்தல், பாரம்பரிய விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு அளித்தல் போன்றவை குறித்த அறிவிப்புகளை வரவேற்கிறேன்.
தேனியில் உணவுப் பூங்கா, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களை ஒருங்கிணைத்து சிறுதானிய சிறப்பு மண்டலம் அமைப்பது போன்ற அறிவிப்புகள் மிகுந்த பயன்அளிக்கும். விவசாயிகளின் நிலைமைகளை உள்வாங்கி, விவசாயிகளின் நலன் சார்ந்த பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.
பனை பொருட்கள்
ராம்பிரகாஷ் (சுற்றுச்சூழல் ஆர்வலர், பழனிசெட்டிபட்டி) :- பட்ஜெட்டில் விவசாயிகளின் நலன் கருதி பல திட்டங்கள் உள்ளதை வரவேற்கிறேன். பனை மேம்பாட்டு இயக்கம், பனை பொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்த முக்கியத்துவம் கொடுத்துள்ளதும், பனை விதைகளை வழங்கி நடவு செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளதும் வரவேற்கத்தக்கது.
இது பனை விவசாயிகள் மற்றும் பனை சார்ந்த தொழிலில் ஈடுபடுவோருக்கு பொருளாதார வலிமையை ஏற்படுத்திக் கொடுக்கும்.
பரசுராமன் (ஆவண எழுத்தர், உத்தமபாளையம்) :- தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக காய்கறி சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. கேரள மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். தற்போது தேனி மாவட்டத்தில் மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள் அமைத்து, அருகாமையில் உள்ள மாநில வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்ய வசதி ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உழவர் சந்தைகளை சீரமைத்தல் மற்றும் புதிய உழவர் சந்தைகள் அமைத்தல் போன்ற அறிவிப்புகள் உள்பட பல சிறப்பான அறிவிப்புகள் உள்ளதால் இந்த பட்ஜெட்டை வரவேற்கிறேன்.
தக்காளி விலை
ஆசியா மரியம் (பொறியியல் கல்லூரி மாணவி, கம்பம்) :- வேளாண் துறையை எந்திரமயமாக்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வேளாண் பணிகளில் டிரோன் பயன்படுத்துவதற்கு பயிற்சிகள் அளிப்பது, பனை ஏறும் கருவியை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு வழங்குதல், சூரிய மின்சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதை வரவேற்கிறேன். விதை முதல் விளைச்சல் வரை மின்னணு முறையில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதும் சிறப்பு வாய்ந்தது.
ஜெயராணி (குடும்பத்தலைவி, கம்பம்) :- தக்காளி விலை வீழ்ச்சி அடைவதும், தங்கம் விலை போல் கிடுகிடுவென உயர்வதுமாக இருப்பதால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது தக்காளி விலையை சீராக்க பருவமில்லா காலங்களிலும் தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விலையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. தக்காளி அன்றாடம் உணவில் ஓர் அங்கமாகிவிட்டது. அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்து விவசாயிகளையும், கடுமையாக உயர்ந்து மக்களையும் இனி வரும் காலங்களில் பாதிக்காமல் இருந்தால் மகிழ்ச்சி தான்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.