கடைக்குள் புகுந்து பணம் திருட்டு

போடி பஸ் நிலையத்தில் உள்ள கடைக்குள் புகுந்து பணம் திருடிய கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-19 15:19 GMT
போடி:

போடி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நந்தீஸ்குமார் (வயது 28). இவர், போடி பஸ் நிலையத்தில் பலகார கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில், கடையை பாதி அடைத்த நிலையில் நந்தீஸ்குமார் தூங்கி கொண்டிருந்தார். 

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது கடையில் இருந்த ரூ.3 ஆயிரம் மாயமாகி இருந்தது. நந்தீஸ்குமார் தூங்கியதை நோட்டமிட்ட மர்ம நபர் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போடி நகர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சுனில் குமார் (36) என்பவர் நந்தீஸ்குமாரின் கடையில் பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து சுனில்குமாரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்