வடபாதிமங்கலம் கிளியனூர் பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

பாதியில் நிறுத்தப்பட்ட வடபாதிமங்கலம் கிளியனூர் பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர்.

Update: 2022-03-19 15:11 GMT
கூத்தாநல்லூர்:
பாதியில் நிறுத்தப்பட்ட வடபாதிமங்கலம் கிளியனூர் பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். 
கிளியனூர் 
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில்  கிளியனூர் கிராமத்திற்கும், புனவாசல் கிராமத்திற்கும் இடையே வெண்ணாற்றின் குறுக்கே 80 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் குறுகலான பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இந்த பாலத்தை கிளியனூர் பெருமாள் கோவில் தெரு, மேலத்தெரு, தாமரைக்குளம் தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு, மாரியம்மன் கோவில் தெரு மற்றும் அன்னுக்குடி, குலமாணிக்கம், புனவாசல், வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர். 
விரிசல்கள் 
இந்த பாலத்தை கடந்து தான் அப்பகுதி பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வர வேண்டும். இந்த பாலத்தில் கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தன.  இந்த பாலம் சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் தடுப்பு தூண்கள், முகப்பு சுவர்கள் இடிந்து விழுந்தும், தடுப்பு கம்பிகள் இல்லாமல், மடிந்து போன மூங்கில் மரங்களால் தடுப்பு கம்பிகள் கட்டப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் பாலம் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பாலத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். 
கோரிக்கை 
இதனால் சேதமடைந்த பாலத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக அகலமான சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 
இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை அகற்றினர். பின்னர்  அகலமான பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. அப்போது  மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு  ஆற்றில் தண்ணீர் வந்ததால் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. 
பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
இதனால் கடந்த ஓராண்டாக அப்பகுதி மக்கள் பாலம் இல்லாமல் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும்  பள்ளி மாணவர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் நீண்ட தூரம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும், ஆற்றில் தண்ணீர் குறைந்து விட்டதாலும் வருகிற ஜூன் 12- ந் தேதி மீண்டும் தண்ணீர் திறப்பதற்கு முன்பு வடபாதிமங்கலம் கிளியனூர் பாலம் கட்டும்  பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். 
----

மேலும் செய்திகள்