கடலில் நீச்சல் அடிக்கும் மாற்றுத்திறனாளி சிறுமி

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே மாற்றுத்திறனாளி சிறுமி கடலில் நீச்சல் அடிக்க உள்ளார்.

Update: 2022-03-19 15:09 GMT
ராமேசுவரம், 
இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் கடலில் நீந்தி வருவதற்காக மும்பையைச் சேர்ந்த 13 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் ராமேசுவரத்தில் இருந்து நேற்று படகு மூலம் இலங்கை தலைமன்னாருக்கு புறப்பட்டுச் சென்றார். 
மும்பையில் உள்ள இந்திய கடற்படை நிலையத்தில் பணிபுரியும் மதன்ராய். அவரது மனைவி ரெஜினா ராய். இவர்களது மகள் ஜியாராய்(வயது13). மாற்றுத் திறனாளியான இந்த சிறுமி ஏற்கனவே மும்பை வொர்லி கடல் பகுதியில் இருந்து கேட்வேஆப்இந்தியா பகுதி வரை 36 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் பாக் நீரிணை கடல் பகுதியான இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை சுமார் 28 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீச்சல் அடித்து சாதனை படைக்க நேற்று  ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் இருந்து விசைப்படகு மூலம் புறப்பட்டு சென்றார். சிறுமியை அனைத்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் தேவதாஸ், சேசு ராஜா, சகாயம், எமரிட் உள்ளிட்டோர்  வழியனுப்பி வைத்தனர். இவருடன் இவரது பெற்றோர்கள் தமிழக விளையாட்டு துறையின் சார்பில் கண்காணிப்பாள ராக விஜயகுமார் மற்றும் நீச்சல் பயிற்சியாளர், மீனவர்கள் உள்ளிட்ட 11 பேர் அரசு அனுமதியுடன் படகில் சென்று உள்ளனர். இன்று அதிகாலை 3 மணிஅளவில் தலைமன்னார் பகுதியில் இருந்து நீச்சல் அடிக்க தொடங்கும் இந்த சிறுமி மதியம் 2 மணிக்கு தனுஷ்கோடியை அடைகிறார். 

மேலும் செய்திகள்