இன்று உலக சிட்டுக்குருவி தினம் அடைக்கலம் கொடுப்போம்-அழியாமல் காப்போம்
இன்று உலக சிட்டுக்குருவி தினம் ஆகும். எனவே சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் கொடுப்போம். அதை அழியாமல் காப்போம் என்று உறுதி ஏற்போம்.
திண்டுக்கல்:
இயற்கை அன்னையின் மடியில் தவழும் உயிரினங்கள் பலவகை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணாதிசயத்தை கொண்டவை. மண்புழு, பூச்சிகள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் வரை அனைத்து உயிர்களும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்வதே இயற்கையின் விதியாகும்.
சிட்டுக்குருவிகள்
பல்லுயிர் பெருக்கத்தின் ஆணிவேராக பறவைகள், விலங்குகளை குறிப்பிடலாம். பறவைகளை பொறுத்தவரை கீச் குரலில் ரீங்காரமிடும் தேன் சிட்டு குருவிகள், அழகு நடனமாடும் மயில்கள், இசை பாடும் குயில்கள், இரவிலும் உருட்டு விழியால் மிரட்டும் ஆந்தைகள் என பலவகை உண்டு.
அதில் மனிதனின் மனதை கட்டிப்போடும் பறவைகளில் சிட்டுக்குருவிகள் தனி சிறப்பு பெற்றவை. நம்மை முகம்மலர வைப்பது மலர்கள் என்றால், மனதை மகிழ்விக்க வைப்பது சிட்டுக்குருவிகள் என்று கூறிவிடலாம். மண்புழுவை விவசாயிகளின் தோழன் என்று அழைப்போம். அதேபோல் சிட்டுக்குருவிகளும் விவசாயிகளுக்கு தோழனாக இருப்பவை தான்.
பூச்சி கொல்லி மருந்து
வண்ணம், உருவம், வாழ்விட வேறுபாடு கொண்ட பலவகை சிட்டுக்குருவிகள் உள்ளன. பூக்களின் தேன், சிறு தானியங்கள், பூச்சிகள் போன்றவை சிட்டுக்குருவிகளின் பிரதான உணவாகும். பொதுவாக நெல், சோளம் உள்ளிட்ட தானிய பயிர்களை சிறு, சிறு பூச்சிகள் தாக்குவதால் மகசூல் பாதிக்கும்.
ஆனால் சிட்டுக்குருவிகள் அந்த பூச்சிகளை இரையாக தின்றுவிடும். அதன்மூலம் தானும் வாழ்ந்து, விவசாயத்தையும் வாழ வைத்தது. இதற்கிடையே விவசாயத்துக்கு பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்த தொடங்கினோம். பயிர்களை பூச்சிகள் தாக்குவதை தடுக்க விதவிதமான பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டன.
அழிந்த இனம்
இதனால் தானியங்கள் விஷமாக மாறி, அதை தின்னும் சிட்டுக்குருவிகளின் உயிரையும் பறித்தது. இதுஒருபுறம் இருக்க குடியிருப்புகளின் பெருக்கத்தால் காடுகள் அழிப்பு நடக்கிறது. ஒருகாலத்தில் வீடுகள் தோறும் மரங்கள் நின்றன. தற்போது வீடுகளை கட்டுவதற்கு மரங்களை வெட்டும் நிலை உள்ளது. அதேபோல் வீடுகளில் குருவிகள் கூடு கட்டுவதற்கு மக்கள் வசதி செய்து கொடுத்தனர். அதை தற்போது பார்க்க முடியவில்லை.
மேலும் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சும் சிட்டுக்குருவிகளை பாதிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இவ்வாறு சிட்டுக்குருவிகளின் வாழ்வியல் முறை மாறியதால் அவற்றின் இனப்பெருக்கம் குறைந்தது. அதுவே காலப்போக்கில் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து அவற்றின் எண்ணிக்கை குறைய காரணமானது.
அடைக்கலம் கொடுப்போம்
அதை பற்றி பலர் கவலை கொள்ளாமல் நகர்ந்து சென்றாலும், சிட்டுக்குருவிகளின் மீது கருணை கொண்டவர்களும் உள்ளனர். வீட்டில் மூங்கில் கட்டைகள், கூடைகள் அமைத்து சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உள்ளனர். மேலும் இரை, தண்ணீர் வைத்து சிட்டுக்குருவிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே கரிசல்பட்டியில் அலோன்ராஜ் என்பவர் வீட்டில் மூங்கில் கூடு அமைத்து சிட்டுக்குருவிகளுக்கு வாழ்வளித்து வருகிறார். இதுபோன்ற நபர்களால் சிட்டுக்குருவிகளின் இனம் முற்றிலும் அழிந்து விடாமல் உள்ளது. எனவே சிட்டுக்குருவிகள் பாதுகாப்பில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். அதற்காக நாம் பெரிய அளவில் முயற்சிகள் எடுக்க வேண்டியது கூடஇல்லை. விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும். மரங்களை அதிக அளவில் நடவேண்டும்.
வீட்டின் மொட்டை மாடி உள்ளிட்ட இடங்களில் சிறு தானியங்கள், தண்ணீர் வைப்பதோடு சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கு மூங்கில் கட்டைகளில் துளையிட்டு வைத்தால் கூட போதுமானது. கோடைகாலத்தில் அவற்றின் தாகம், பசியை போக்குவதோடு வாழ்வதற்கு அடைக்கலமும் கொடுக்கலாம். உலக சிட்டுக்குருவி தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் கொடுப்போம்-அழியாமல் காப்போம் என நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.