திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிபோட்டு அடக்கிய வீரர்கள் 32 பேர் காயம்
திண்டுக்கல் அருேக நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். காளைகள் முட்டியதில் 32 பேர் காயம் அடைந்தனர்.
கன்னிவாடி:
ஜல்லிக்கட்டு
திண்டுக்கல் அருகே உள்ள குட்டத்து ஆவாரம்பட்டியில் புனித அந்தோணியார் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.
இந்தநிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக இந்த ஆண்டு புனித அந்தோணியார் கோவில் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது.
700 காளைகள்
ஜல்லிக்கட்டில் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தேனி, சேலம், சிவகங்கை, ஈரோடு, கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் கலந்து கொண்டன. காளைகளை உதவி இயக்குனர் ஆறுமுகராஜ், கால்நடை மருத்துவர் சாய்ராபானு ஆகியோர் தலைமையிலான கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கினர்.
இதேபோல் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்தும் 400 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். இவர்களுக்கு கன்னிவாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தங்கம் சாம் இளங்கோ தலைமையில், டாக்டர்கள் லிங்கேஸ்குமார், சந்துரு ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து காளைகள் பிடிக்க அனுமதித்தனர்.
காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஆவாரம்பட்டி பங்குத்தந்தை ஜான் நெப்போலியன், ஆர்.டி.ஓ. பிரேம்குமார் மற்றும் அருட்தந்தையர்கள் போட்டியை தொடங்கி வைத்தனர்.
32 பேர் காயம்
ஒரு குழுவுக்கு 50 பேர் வீதம் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிக்குதித்தபடி சீறிப்பாய்ந்தன. அந்த காளைகளை போட்டிப்போட்டு காளையர்கள் அடக்கினர்.
இதில் சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கின. பல காளைகள், வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் கம்பீரமாக நின்றது. அப்போது பார்வையாளர்கள் உற்சாகமாக கைகளைதட்டி ஆரவாரம் செய்தனர்.
கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களை அவை போக்கு காட்டி முட்டித் தள்ளின. இதில் மாடுபிடி வீரர் 13 பேர், பார்வையாளர் 9 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 10 பேர் என 32 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 4 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு வட்டார மருத்துவ அதிகாரி செல்லமுத்து, டாக்டர் ஜான் இளங்கோ, துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் வல்லவன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், கோபால் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டு பிற்பகல் 3 மணி வரை நடந்தது.
தங்கம்-வெள்ளிக்காசுகள்
ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டி காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு 10 பீரோ, 500 அண்டா, 3 பிரிட்ஜ், 3 வாசிங்மிஷின், 500 நாற்காலி, 5 மேஜை, 3 சைக்கிள், 100 கட்டில், 50 தங்கக்காசு, 200 வெள்ளிக்காசு, வேட்டி, துண்டுகள் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டை கலெக்டர் விசாகன், டி.ஐ.ஜி.ரூபேஷ்குமார் மீனா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் பாலாண்டி மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.