‘தினத்தந்தி’ புகார் பெட்டி:மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-19 14:07 GMT
மூடப்படாத தொட்டி

கோத்தகிரி பேரூராட்சி நீர்உந்து நிலையம் அருகே சாலையோரத்தில் குடியிருப்புகளுக்கு குடிநீர் திறப்பதற்கான வால்வு அமைந்து உள்ளது. இந்த வால்வுக்காக கட்டப்பட்டு உள்ள தொட்டி மூடப்படாமல் இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்களின் சக்கரங்கள் தவறுதலாக தொட்டிக்குள் இறங்கி சிக்கிக்கொள்வதுடன், இரவு நேரத்தில் நடந்து செல்வோரும் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே தொட்டியை சரியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாமோதரன், கோத்தகிரி.

தெருவிளக்கு வசதி இல்லை

பந்தலூர் அருகே உள்ள கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-1) தகர லைன்ஸ் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அங்கு காட்டுயானைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அனால் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் காணப்படுகிறது. எனவே அங்கு போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மாரியப்பன், கொளப்பள்ளி. 

சுகாதாரமற்ற பஸ் நிலையம்

பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், பழனி, மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக பழைய பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் அங்கு பிளாஸ்டிக் கவர்கள், பார்சல் உணவிற்கு பயன்படுத்திய எச்சில் இலைகள், காலியான குடிநீர் பாட்டில்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதனால் சுகாதாரமற்ற நிலையில் பஸ் நிலையம் காணப்படுகிறது. இது அங்கு வரும் பயணிகளை முகம் சுழிக்க வைக்கிறது. எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

தவமணி, பொள்ளாச்சி.

தெருநாய்கள் தொல்லை

கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவர்சோலை பேரூராட்சி ஒற்றவயல் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்க முயல்கின்றன. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை உள்ளது. நாய்கள் துரத்தும்போது அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமது, தேவர்சோலை.

தாமதமாக இயக்கப்படும் பஸ்

கோவைப்புதூர்-எஸ்.ஐ.எச்.எஸ். காலனி வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் சிங்காநல்லூர் வழியாக இயக்கப்படுகிறது. ஆனால் தினமும் காலதாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. அதாவது இரவு 7 மணிக்கு டவுன்ஹால் வர வேண்டிய பஸ், இவரு 7.30 மணிக்குதான் வருகிறது. இதனால் அந்த பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, அந்த பஸ் உரிய நேரத்தில் வர வழிவகை செய்ய வேண்டும்.

சுரேஷ், கோவைப்புதூர்.

வாகன ஓட்டிகள் பாதிப்பு

கோவை வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட காந்திமாநகர், ஆவாரம்பாளையம் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவை அந்த வழியாக செல்லும் வாகனங்களின் குறுக்கே ஓடுவதால், விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அங்கு தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருமாள்சாமி, ஆவாரம்பாளையம்.

காய்ந்து கிடக்கும் செடிகள்

பொள்ளாச்சியில் இருந்து அம்பராம்பாளையம் வழியாக ஆனைமலை செல்லும் நான்கு வழிச்சாலை நடுவில் உள்ள தடுப்பு பகுதியில் செடிகள் நடவு செய்யப்பட்டு இருந்தது. ஆரம்ப காலத்தில் தண்ணீர் ஊற்றி நன்முறையில் பராமரிக்கப்பட்டு வந்த அந்த செடிகள் நாளடைவில் கேட்பாரற்று போயின. இதனால் அந்த செடிகள் காய்ந்து கிடக்கின்றன. இதை அந்த வழியாக செல்பவர்கள் கண்டு கவலை கொள்கின்றனர். எனவே அந்த செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.

தாமரை தமிழ் நிலவு, பொள்ளாச்சி.

போக்குவரத்து சிக்னல் வேண்டும்

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன. இதன் காரணமாக பயணிகள் அச்சத்துடன் உலா வருவதை காண முடிகிறது. எனவே அங்கு போக்குவரத்து சிக்னல் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

கருப்புசாமி, கருமத்தம்பட்டி.

வீணாகும் குடிநீர்

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அருகே உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், குடிநீர் வீணாவது ஏற்புடையது அல்ல. மேலும் அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே அந்த குழாய் உடைப்பை சரி செய்து, தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும்.

கண்ணன், ஆனைமலை.

போக்குவரத்து இடையூறு

தொண்டாமுத்தூர் சந்தைபேட்டை பகுதியில் மாலை நேரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையின் இருபுறமும் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட நேரிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

ராஜ்குமார், தொண்டாமுத்தூர்.

மேலும் செய்திகள்