மாமனாரை தாக்கி கொலை செய்த மருமகன் கைது
வாழ மறுத்து பெற்றோர் வீட்டுக்கு வந்த மனைவியை வாழ வருமாறு அழைக்க வந்த இடத்தில் ஏற்பட்ட தகராறில் மாமனாரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.;
ராமநாதபுரம்,
வாழ மறுத்து பெற்றோர் வீட்டுக்கு வந்த மனைவியை வாழ வருமாறு அழைக்க வந்த இடத்தில் ஏற்பட்ட தகராறில் மாமனாரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.
காண்டிராக்டர்
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜா (வயது58). பெயிண்டிங் காண்டிராக்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி உமா மகேஸ்வரி என்ற மனைவியும் செல்வ சரண்யா என்ற மகளும், முனீஸ் பாலநாதன் என்ற மகனும் உள்ளனர்.
செல்வ சரண்யாவை ராமேசுவரம் என்.எஸ்.கே.வீதியை சேர்ந்த முனியாண்டி மகன் சசிக்குமார் (39) என்பவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்து 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆட்டோ டிரைவரான சசிக்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் கணவனுடன் கோபித்து கொண்டு செல்வ சரண்யா ராமநாதபுரம் வருவதும் பின்னர் வந்து சமாதானமாக பேசி அழைத்து செல்வதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஆத்திரம்
இந்தநிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்னர் மீண்டும் குடித்துவிட்டு வந்துஅடித்ததில் காயமடைந்த செல்வசரண்யா ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் தன் பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டாராம். இதன்பின்னர் சசிக்குமார் பலமுறை கேட்டும் வரமுடியாது என்று பிடிவாதமாக இருந்துவிட்டாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சசிக்குமார் தனது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். அவரை கண்டதும் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு உள்ளேயே இருந்து கொண்டார்களாம். கதவை திறக்காமல் பூட்டிக்கொண்டு இருப்பதை கண்டு ஆத்திரமடைந்த சசிக்குமார் பின்வாசல் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு இருந்த கதவினை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். கதவை உடைக்கும் போது சசிக்குமாருக்கு தலை பகுதியில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ரத்தம் சொட்ட சொட்ட ஆத்திரத்தில் உள்ளே புகுந்து மனைவியிடம் என்னுடன் வாழ வரமாட்டாயா, ரேஷன்கார்டினை எதற்காக எடுத்து கொண்டு வந்து மாற்றி வைத்து கொண்டாய் என்று கேட்டு அடிக்க பாய்ந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தையும், தாயும் தடுக்க முயன்றுள்ளனர்.
தாக்குதல்
அவர்களை கீழே தள்ளிவிட்டு அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து மாமனார் ராஜாவை நீ உயிரோடு இருந்தால்தானே அடிக்கடி இவள் இங்கு வருவாள் நீ ஒழிந்தால் வர வழியில்லை என்று என்னோடு வாழ்வாள் என்று கூறிக்கொண்டே மாமனாரின் தலையில் குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜா மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாயும், மகளும் கத்தி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர்.
அனைவரையும் கண்ட சசிக்குமார் அச்சமடைந்து பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டார். மயங்கிய நிலையில் கிடந்த ராஜாவை உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ராஜா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கைது
இதுகுறித்து ராஜாவின் மனைவி உமா மகேஸ்வரி (50) அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சசிக்குமாரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் இந்த சம்பவத் திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரத்தில் மனைவி வாழ மறுத்து கோபித்து கொண்டு வந்ததால் அழைக்க வந்தபோது மருமகனே மாமனாரை அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.