கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் தலையில் அம்மிக்கல்லை போட்டு பெண்ணின் கள்ளக்காதலன் கொடூரமாக கொலை
கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் தலையில் அம்மிக்கல்லை போட்டு பெண்ணின் கள்ளக்காதலன் கொடூரமாக கொலை;
அனுப்பர்பாளையம்
திருப்பூரில் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் தலையில் அம்மிக்கல்லை போட்டு பெண்ணின் கள்ளக்காதலன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்காதல்
திருவாரூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 45). இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் வீரபாண்டி பகுதியில் தங்கி வேலை பார்த்தபோது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரியா (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 1 ஆண்டாக சசிக்குமார், மனைவி பிரியா மற்றும் 2 மகள்களுடன் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்த திலகர்நகர் பகுதியில் வசித்து வந்தார். தம்பதியினர் அந்த பகுதியில் உள்ள வெவ்வேறு பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் பிரியாவுக்கு அதே நிறுவனத்தில் வேலை பார்த்த திருவிடைமருதூரை சேர்ந்த தமிழரசன் (30) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தமிழரசன் 15 வேலம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தின் பின்புறம் தனியாக வசித்து வந்தார். இதையடுத்து தமிழரசனும், பிரியாவும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த விவகாரம் சசிக்குமாருக்கு தெரிய வந்தது. அவர் மனைவியையும், தமிழரசனையும் கண்டித்துள்ளார்.
கள்ளக்காதலனுடன் ஓட்டம்
ஆனால் காமமோகம் கரையை உடைத்து பள்ளம் கண்ட இடமெல்லாம் தடையற்று செல்லும் வெள்ளம்போல் இடைவெளி கிடைக்கும் நேரமெல்லாம் இடைவிடாமல் உறவை பலப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கள்ளக்காதல் உறவால் பிரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளை விட்டு பிரிந்து கள்ளக்காதலன் தமிழரசனுடன் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சசிக்குமார் பிரியாவை சமாதானப்படுத்தி குடும்பத்துடன் வந்து வாழுமாறு அழைத்து வந்துள்ளார்.
இதன் பின்னரும் தமிழரசன் பிரியாவுடனான உறவை துண்டிக்கவில்லை. இதனால் சசிக்குமார் கோபம் அடைந்து பிரியா மற்றும் தமிழரசனை கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால் தமிழரசன் பிரியாவுடனான உறவை கைவிட முடியாது என்று சசிக்குமாரிடம் சவால் விட்டதாகவும் தெரிகிறது.
தலையில் கல்லை போட்டு கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரியா பனியன் நிறுவனத்தில் இரவு வேலை இருப்பதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் சசிக்குமார் சந்தேகம் அடைந்து பிரியா வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது அவர் வேலைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து பிரியாவின் கள்ளக்காதலன் வீட்டிற்கு சென்று பார்க்கலாம் என்று நினைத்து சசிக்குமார் 15 வேலம்பாளையத்தில் உள்ள தமிழரசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டிற்கு வெளியே தமிழரசன் தூங்கிக்கொண்டிருந்தார். வீட்டிற்குள் எட்டி பார்த்தபோது பிரியா அங்கு தூங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சசிக்குமார் பிரியாவை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு தமிழரசனிடம் கூறி உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்த பிரியா கணவரிடம் இந்த நேரத்தில் ஏன் இங்கு வந்து தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சசிக்குமார் தமிழரசனை கீழே தள்ளி அருகில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து தமிழரசன் தலையில் போட்டார். இதில் தமிழரசன் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சரணடைந்தார்
இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா கூச்சல் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் சசிக்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை சசிக்குமார் 15 வேலம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி குணசுந்தரியிடம் சரணடைந்தார். இதையடுத்து குணசுந்தரி 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் சசிக்குமாரை ஒப்படைத்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் சசிக்குமாரை கைது செய்தார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலை செய்யப்பட்ட தமிழரசனின் மனைவி ஹேமலதா கடந்த 2019-ம் ஆண்டு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். தமிழரசனின் 2 மகன்கள் சொந்த ஊரில் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். திருப்பூரில் கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியின் கள்ளக்காதலன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.