திருப்பூர் மாநகரில் 60 வார்டுகளிலும் 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்

திருப்பூர் மாநகரில் 60 வார்டுகளிலும் 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்

Update: 2022-03-19 13:24 GMT
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் 60 வார்டுகளிலும் 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.
ஆய்வுக்கூட்டம்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று காலை மாநகராட்சி அலுவலக அரங்கில் நடைபெற்றது. ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கினார். துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம், பசுமை வழி பூங்கா, குடிநீர் வழங்கல், மேற்கூரை சோலார் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, சூரியஒளி மின்சாரம், மீன் அங்காடி, சாலை பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.
6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்
கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-
திருப்பூர் மாநகரில் வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்றுவதில் பொதுமக்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை நமக்கு உள்ளது. கவுன்சிலர்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுத்து நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும். வரும் 5 ஆண்டுகளில் திருப்பூர் மாநகராட்சியை 21 மாநகராட்சிகளில் முன்னோடி மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம். அதற்கு அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சிக்கு முன்பு மாநகராட்சியில் 5,6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது பல பகுதிகளில் 10, 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், பாரபட்சமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. வரும் காலங்களில் 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். 4-வது குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும்போது மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். அனைத்து பகுதிகளிலும் எந்தவித பாகுபாடும் காட்டாமல் 60 வார்டுகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். குழாய் உடைப்புகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.
தெருவிளக்குகள் பராமரிப்பு
திட்டப்பணிகள் செய்யும் போது, அந்த பணி எத்தனை நாட்களில் முடியும் என்பதை தெளிவாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். மாற்றுப்பாதை தேவைப்பட்டால் அதையும் தெளிவான சிந்தனையுடன் ஒவ்வொரு பணியையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு வார்டு வாரியாக அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். தெருவிளக்குகள் முழுமையாக எரியச் செய்ய வேண்டும். இரவு நேரத்தில் தொழிலாளர்கள் அச்சமின்றி வீடு திரும்ப துணையாக இருக்கும்.
மாநகரின் பிரதான சாலைகளை முடிந்த வரை சீரமைத்துக்கொடுக்க வேண்டும். புதிதாக அமைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் குண்டு, குழிகளை சீரமைக்க வேண்டும். இணைப்பு சாலைகளை மண் கொட்டி சீரமைத்துக்கொடுக்க வேண்டும். மண்டலம் வாரியாக உதவி ஆணையாளர்கள் இதை கவனித்து குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து கொடுக்க வேண்டும். நாளிதழ்களில் தெரிவிக்கப்படும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநகர் நல அதிகாரி பிரதீப் கிருஷ்ணகுமார், மாநகர பொறியாளர் (பொறுப்பு) முகமது சபியுல்லா, உதவி ஆணையாளர்கள், மண்டல உதவி ஆணையாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்