புதிய ஏல முறையை ரத்து செய்ய வேண்டும்

பல்வேறு குளறுபடிகளால் பாதிக்கப்படுவதால் புதிய ஏல முறையை ரத்து செய்ய வேண்டும் என்று குன்னூர் தேயிலை வர்த்தக அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-03-19 13:05 GMT
குன்னூர்

பல்வேறு குளறுபடிகளால் பாதிக்கப்படுவதால் புதிய ஏல முறையை ரத்து செய்ய வேண்டும் என்று குன்னூர் தேயிலை வர்த்தக அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். 

புதிய முறையில் ஏலம்

நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் தேயிலைத்தூள், குன்னூர் வர்த்தக அமைப்பு நடத்தும் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது இங்கிலீஷ் முறைப்படி நடத்தப்பட்டு வந்தது

இந்த முறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ரத்து செய்து, கடந்த ஜனவரி மாதம் முதல் பாரத் ஏலம் என்று அழைக்கப்படும் ஜப்பானிய முறை பின்பற்றப்பட்டது. இது தென்னிந்தியாவில் உள்ள குன்னூர், கோவை, கொச்சி ஆகிய ஏல மையங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டது. ஆனால் வடமாநிலங்களில் உள்ள ஏல மையங்களில் பழைய முறையே பின்பற்றப்படுகிறது.

ஏலம் ரத்து

இதற்கிடையில் பாரத் ஏல முறையை பின்பற்றும்போது கணினி செயல்பாடுகளில் குளறுபடி உள்ளதாகவும், தேயிலைத்துள் ரகங்களின் விலை சரியாக பதிவாகாமல் இருப்பதாகவும் வர்த்தகர்கள் புகார் தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த தேயிலை வாரியம், பாரத் ஏல முறை சிறந்தது என்றும், வர்த்தகர்கள் தங்களது கணினிகளை நவீனப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியது. வழக்கமாக குன்னூரில் வியாழக்கிழமை இலை ரக தேயிலை ஏலம், வெள்ளிக்கிழமை டஸ்ட் ரக தேயிலை ஏலம் நடைபெறும். அதன்படி கடந்த 17-ந் தேதி(வியாழக்கிழமை) குன்னூரில் இலைரக தேயிலை ஏலம்(விற்பனை எண்-11) தொடங்கியது. அந்த ஏலத்துக்கு 16 லட்சம் கிலோ தேயிலை விற்பனைக்கு வந்தது. ஆனால் திடீரென குளறுபடி ஏற்பட்டதால், ஏலம் ரத்து செய்யப்பட்டது.

தேயிலை வாரியம் அறிவுரை

இதனால் புதிய ஏல முறையை ரத்து செய்ய வேண்டும் என்று குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் தேயிலை வாரியத்திடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனாலும் புதிய முறையிேலயே ஏலம் நடத்த வேண்டும் என்று தேயிலை வாரியம் அறிவுறுத்தியது. இதை ஏற்று மீண்டும் ஏலம் நடத்த ஏற்பாடு நடந்தது. தொடர்ந்து இலை ரக தேயிலை ஏலம் நேற்று (வெள்ளிக்கிழமை) மற்றும் டஸ்ட் ரக தேயிலை ஏலம் இன்று(சனிக்கிழமை) நடைபெற்றது. 

மேலும் செய்திகள்