வேலூர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பணி தொடர்பாக வீடுகளை கணக்கெடுக்க முடிவு
வேலூர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பணி தொடர்பாக வீடுகள் கணக்கெடுக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பணி தொடர்பாக வீடுகள் கணக்கெடுக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்தில் வார்டு கவுன்சிலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். துணை மேயர் சுனில்குமார் முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், நகர்நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் கவுன்சிலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
1-வது மண்டலத்தில் உள்ள வார்டுகளில் எல்லைப்பகுதி வரையறை செய்யப்பட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் ஒவ்வொரு வார்டுகளிலும் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது. எனவே சில வார்டுகளுக்கு துப்புரவு பணியாளர்கள் குறைவாக உள்ளனர். சில வார்டுகளுக்கு பணியாளர்கள் அதிகமாக உள்ளனர்.
எனவே குறைந்த துப்புரவு பணியாளர்கள் பணியாற்றும் வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்கு கூடுதலாக பணியாளர்கள் வேண்டும் என கூட்டத்தில் தெரிவித்தனர்.
வீடுகள் கணக்கெடுப்பு
அதேவேளையில் அதிகம்பேர் பணியாற்றும் வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளுக்கு போதுமான துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவர்களை வேறு இடத்துக்கு பணிமாற்றம் செய்யக்கூடாது என்றனர். மேலும் கவுன்சிலர்கள், தங்களது வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.
கூட்டத்தின் முடிவில் அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். அதன்பின்னர் தேவைக்கேற்ப துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மேயர், துணை மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் காட்பாடி உழவர் சந்தையில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.