ஒவைசி கட்சியின் கூட்டணி யோசனையை சிவசேனா நிராகரித்தது

ஒவைசி கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் திட்டவட்டமாக கூறினார்.

Update: 2022-03-19 12:25 GMT
கோப்பு படம்
மும்பை, 
ஒவைசி கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் திட்டவட்டமாக கூறினார். 
கூட்டணி யோசனை
ஐதாராபாத் எம்.பி. ஆசாதுதீன் ஒவைசி தலைமையில் எம்.ஐ.எம். கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியை சேர்ந்த மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் தொகுதி எம்.பி. இம்தியாஸ் ஜலீல். இவரை சமீபத்தில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே  அவரது வீட்டில் சந்தித்தார். 
 இந்த சந்திப்பின் போது இம்தியாஸ் ஜலீல் மராட்டியத்தில் ஆளும் மகாவிகாஸ் அகாடியுடன் கூட்டணி வைக்க தயார் என ராஜேஷ் தோபேவிடம் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், " அரசியல் தலைவர்கள் எப்போதும் எம்.ஐ.எம். கட்சி பா.ஜனதாவின் ‘பி' டீம் என குற்றம்சாட்டுகின்றனர். எங்களால் தான் ஓட்டுகள் சிதறி பா.ஜனதா வெற்றி பெறுகிறது என்று கூறுகிறார்கள்.  எனவே இந்த புரிதலை அகற்ற எம்.ஐ.எம். கட்சி மராட்டிய அளவில் மகாவிகாஸ் அகாடியுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளது. பா.ஜனதா கட்சி நாட்டுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே பா.ஜனதாவை வீழ்த்த எங்களது கட்சி எல்லா எதிர்க்கட்சிகளுடனும் கூட்டணிக்கு தயார்" என்றார்.
சிவசேனா நிராகரிப்பு
ஆனால் ஒவைசி கட்சியின் கூட்டணி யோசனையை சிவசேனா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இதுகுறித்து சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறுகையில், “நாங்கள் அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. ஏனெனில் அவுரங்காசீப் முன் குனியும் எந்த நபருடனும் நாங்கள் கைகோர்க்க மாட்டோம். சத்ரபதி சிவாஜி, சம்பாஜி மகாராஜை பின்தொடரும் எவரும் அந்த கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டார்கள். மேலும் உத்தரபிரதேச தேர்தலில் அந்த கட்சி பா.ஜனதாவின் ‘பி’ என்பதை நிரூபித்து விட்டது” என்றார். 
 பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் சேர வேண்டும் என கூறப்பட்டு வருவது குறித்து முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், " பா.ஜனதாவை தோற்கடிக்க அனைத்து கட்சிகளும் சேருகின்றன. அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. அவர்கள் ஒன்றாகட்டும், நாட்டு மக்கள் மோடியை விரும்புகின்றனர். மக்கள் அவருக்கு வாக்களிப்பார்கள்" என்றார்.

மேலும் செய்திகள்