அதிமுக மற்றும் பாஜகவுக்கு பட்ஜெட் பற்றி பேச எந்தவித தகுதியும் இல்லை
அதிமுக மற்றும் பாஜகவுக்கு பட்ஜெட் பற்றி பேச எந்தவித தகுதியும் இல்லை என்று திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் எம்.பி. கூறினார்.
திருவண்ணாமலை
அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு பட்ஜெட் பற்றி பேச எந்தவித தகுதியும் இல்லை என்று திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் எம்.பி. கூறினார்.
டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை
திருவண்ணாமலையில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் கே.ஜெயக்குமார் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த பிப்ரவரி மாதம் தலைவர் ராகுல்காந்தி சென்னைக்கு வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து அவர் சத்தியமூர்த்தி பவனுக்கும் வருகை புரிந்து காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது காங்கிரஸ், தி.மு.க. இடையே உள்ள உறவை இன்னும் பலப்படுத்த வேண்டும். தி.மு.க. பலமாகவும், காங்கிரஸ் கட்சி பலமில்லாமல் இருந்தால் அது சரியாக இருக்காது. காங்கிரஸ் கட்சியும் பலமாக இருக்க வேண்டும்.
அதற்காக காங்கிரஸ் கட்சியை பலமாக மாற்ற அடிமட்டத்தில் இருந்து உறுப்பினர் சேர்க்கையை ஒழுங்காக செய்ய வேண்டும் என்றார்.
என்ன நிலைப்பாடாக இருந்தாலும் தி.மு.க. - காங்கிரஸ் இடையேயான நட்பு தொடரும். ஒரு சில மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தி.மு.க.வினர் எடுத்து கொண்டதாக புகார்கள் தெரிவித்தனர்.
அதற்காக முதல்-அமைச்சர், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்று வெற்றி பெற்ற தி.மு.க.வினர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையை வரவேற்றோம்.
எந்தவித தகுதியும் இல்லை
மேலும் அ.தி.மு.க., பா.ஜ.க.வில் உள்ளவர்களுக்கு பட்ஜெட் பற்றி எதுவுமே தெரியாது. அவர்கள் பட்ஜெட் பற்றி பேசுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை. ஏனென்றால் நிதி குறித்து தெரியாத ஒருவரை மத்தியில் நிதியமைச்சராக வைத்துள்ளது பா.ஜ.க. அரசு.
கடந்த 8 ஆண்டுகளில் தற்போது தான் சரியான, சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் பற்றி பா.ஜ.க.பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
நடந்து முடிந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. எங்களிடமும் சில குறைகள் இருக்கின்றன.
எங்கள் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறோம். எங்களுடைய கருத்துக்களுக்கும், கொள்கைகளுக்கும் ஒத்துபோகின்ற ஏற்புடைய அனைத்து கட்சிகளை கூட்டணியில் சேர்த்து வருகிற பொது தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட தலைவர்கள் செங்கம் ஜி.குமார், அண்ணாமலை, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் புருஷோத்தமன், காமராஜ், மோகன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் வினோதிசக்திவேல், நகர தலைவர் வெற்றிசெல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.