ஸ்ரீபெரும்புதூர் அருகே சிறுவன், மூதாட்டிக்கு கத்தி வெட்டு - மது வாங்க பணம் தராததால் வாலிபர் வெறிச்செயல்

ஸ்ரீபெரும்புதூர் அருகே மது வாங்க பணம் தராததால் சிறுவன் மற்றும் மூதாட்டியை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-19 11:43 GMT
ஸ்ரீபெரும்புதூர், 

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பட்டுநூல் சத்திரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி சுகுணா, மகன் புவிஅரசு(வயது 4). இவர்கள் சுகுணாவின் தாயார் நாகயம்மாள்(70) உடன் வசித்து வருகின்றனர். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் யுவராஜ்(24). இவர் நேற்று வீட்டின் வெளியே இருந்த மூதாட்டி நாகம்மாளிடம் மது வாங்க பணம் கேட்டு உள்ளார். 

பணம் தர மறுத்த நாகம்மாளை தனது வீட்டிற்குள் தரதரவென இழுத்துச் சென்று அங்கு இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுவன் புவிஅரசையும் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறான்.

இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் பதுங்கி இருந்த யுவராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்