துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-03-19 11:30 GMT
வேலூர்

தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி விசைப்பாம்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெயவேலு முன்னிலை வகித்தார். துணை பொதுச் செயலாளர் ஜெயகிருஷ்ணன் வரவேற்றார்.

மாநில தலைவர் ராஜேந்திரன், வேலூர் மாவட்ட தலைவர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் போது பணிக்கொடையாக ரூ.5 லட்சமும், ஓய்வூதியமாக மாதம் ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும். பணிக்காலத்தில் மரணமடையும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பம்ப் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்