லஞ்சப் புகார்: சப்-இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு ஜெயில் - சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. கடந்த 2012-ம் ஆண்டு இவர், தன்னிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்த ரமேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன்பின்பு சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த மயிலாப்பூர் குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரையை, சுந்தரமூர்த்தி அணுகி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டு அசல் ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க கேட்டார்.
அதற்கு செல்லத்துரை ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சுந்தரமூர்த்தி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின் பேரில் சுந்தரமூர்த்தி லஞ்ச பணத்தை செல்லத்துரையிடம் கொடுத்தபோது அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஓம்பிரகாஷ் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.