பூந்தமல்லி அருகே பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற டிரைவர், கண்டக்டர் மீது போலீசில் புகார்

பூந்தமல்லி அருகே பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற டிரைவர், கண்டக்டர் மீது பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தனர்.

Update: 2022-03-19 04:54 GMT
பூந்தமல்லி,

குன்றத்தூரை அடுத்த கொல்லச்சேரியை சேர்ந்தவர் அன்பரசன். இவருடைய மனைவி கவுதமிஸ்ரீ (வயது 28). ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஸ்ரீபெரும்புதூரில் இருந்து அரசு பஸ்சில் நசரத்பேட்டைக்கு வந்தார்.

நசரத்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் சென்றது. கவுதமிஸ்ரீ, தான் இறங்க வேண்டும் என்பதால் பஸ்சை நிறுத்தும்படி கூறினார். ஆனால் டிரைவர், கண்டக்டர் இருவரும் பஸ்்சை நிறுத்தாமல் சென்றதாக தெரிகிறது.

இதற்கிடையில் மனைவியை அழைத்து செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த அவருடைய கணவர், பஸ் நிற்காமல் செல்வதை கண்டு தனது மோட்டார்சைக்கிளில் பஸ்சை பின்தொடர்ந்து சென்று தனது மனைவியை கீழே இறக்கி விடும்படி கூறினார். ஆனாலும் பஸ்சை நிறுத்தாததால் ஆத்திரம் அடைந்த கவுதமிஸ்ரீயின் கணவர், பூந்தமல்லி போலீஸ் நிலையம் அருகே சாலையின் நடுவில் அரசு பஸ்சுக்கு முன்னால் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தினார்.

ஆனாலும் பஸ்சின் கதவை திறக்காமல் முன்னால் நிறுத்தி இருந்த மோட்டார்சைக்கிளை இடித்து தள்ளிபடி டிரைவர் பஸ்சை ஓட்டிச்சென்றார். இதை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் பூந்தமல்லி பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி கவுதமிஸ்ரீயை இறக்கிவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அவருடைய கணவர், பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்